வாசிப்பனுபவம்: சிறகின் கீழ் வானம்.

ஜூன் 23, 2007 at 9:14 முப 3 பின்னூட்டங்கள்


பம்பரம், கோலி, கிரிகெட், பாண்டி, சீத்துக்கல்லு என நம்மில் பலரும் பன்னிரெண்டு வயதில் விளையாடிக் கழித்திருப்போம். ஆனால் கு.அ.தமிழ்மொழி என்ற சிறுமி தன் பன்னிரெண்டாவது வயதில் ஒரு கவிதைப் புத்தகம் வெளியிட்டு இருக்கிறாள்.

இன்று கவிதை வடிவம் பலதளங்களுக்கு போய் விட்டது. ஆனாலும் பலரையும் ஈர்க்கும் வடிவங்களில் ஒன்று தான் துளிப்பா என்று சொல்லப்படும் ஹைக்கூ வடிவம். பாரதியால் 1916களிலேயே தமிழுக்கு அறிமுகமாகிவிட்ட இந்த ஹைக்கூ வடிவம், 1990களின் தொடக்கத்தில் எழுச்சிகொள்கிறது.
இன்று தமிழில் மட்டும் வந்திருக்கும் ஹைக்கூ நூல்களின் எண்ணிக்கை 500 தொடும்.

ஸ்கேல் வைத்து ஹைக்கூவை அளந்து வந்த கிளுகிளு பாய்ஸ் தாத்தா சுஜாதா கூட கொஞ்சம் ஓய்ந்து விட்டார். ஆனால் அவரது அடியொற்றி, புதுக்கவிதை பேரன்களில் பலர் தாத்தா விட்ட இடத்தை எடுத்துக்கொண்டு விட்டார்கள். இவர்கள் ஆக்கிரமித்து வரும் செமிசீரியஸ் பத்திரிக்கைகளினால் தொடர்ந்து தமிழ் ஹைக்கூகள் புறக்கணிக்கப்பட்டே வருகிறது. ஆனாலும் ஜப்பனிய ஹைக்கூகளை மொழி பெயர்த்து வெளியிட்டு தங்களின் பங்களிப்பை வரலாற்றில் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள் இவர்கள்.

ஜப்பனிய ஹைக்கூவை விட தமிழ் ஹைக்கூ மிகச்சிறந்தது என்பவன் நான். அவை வெறும் ஜடப்பொருளை மட்டுமே பாடக்கூடியவை. தமிழ் ஹைக்கூகள் அப்படியில்லாமல் மக்களின் வாழ்க்கை முறையை /வாழ்வியல் விடயங்களை பாடு பொருளாக்கிக்கொண்டுள்ளான என்பது தான் நமது சிறப்பு.

அதே சமயம் தமிழில் ‘ஹைக்கூ மாதிரி’ எழுதப்பட்டு வரும் போலிகளும் இல்லாமலில்லை. அவற்றை அடையாளங்கண்டு கொள்ள வேண்டிய முக்கியமான பணியும் இன்று ஹைக்கூ வாசகனிடம் உள்ளது. அது போலவே கூறியது கூறல்… ஒருவர் எழுதியதை சில வார்த்தைகள் மாற்றி எழுதி தனது கவிதையாக்கிக் கொள்ளும் முயற்சிகளும் தமிழில் அதிகரித்து விட்டது.

சரி… சரியான தமிழ் ஹைக்கூவை எப்படி அடையாளங்கண்டு கொள்வது என்ற கேள்வி எழலாம். மூன்று வரிகளையும் இப்படி பிரித்துக்கொண்டால் மிகச் சுலபம்…

நெறிபடுத்தப்பட்ட வார்த்தைகள்,
காட்சியை கூட்டல் குறைத்தலின்றி அப்படியே பதிவு செய்தல்,
கடைசி வரிக்குள் ஒளித்து வைக்கப் பட்டிருக்கும் அதிர்வலைகள்.

அவ்வளவு தான் அது சிறந்த ஹைக்கூ என்ற முடிவுக்கு வந்து விடலாம். அங்கத தன்மையோடு எழுதப் படுபவை சென்றியூ! ஒரு சின்ன சம்பவத்தை பத்தியில் கூறி.. பின்னால் ஹைக்கூ எழுதினால் அது ஹைபுன்! அந்ததிகளும் கூட தமிழ்ஹைக்கூவில் வந்து விட்டன.

பெரும் வணிக இதழ்கள் ஹைக்கூ கவிதைகளை பிரசுரிக்கின்றன. ஹைக்கூவை முதலில் வெளியிட்டு பின் தொடர்கதைகளும் எழுதப்பட்டு விட்டன.

மாதத்திற்கு குறைந்தது ஒரு ஹைக்கூ நூலாவது வந்து விடுகிறது என்கிறார் “ஹைக்கூ காதலன்”தோழர் மு.முருகேஷ். அவற்றை துளிப்பா, குறும்பா, குறுங்கவிதை என்றெல்லாம் பெயர் வைத்து அழைத்துக் கொள்கிறார்கள். குழந்தையை எப்படி அழைத்தாலும் அது குழந்தை தானே? அது போல எப்படி அழைக்கப்ப்பட்ட போதிலும் அவை ஹைக்கூ தான்.

வங்கி அதிகாரியாலோ,பள்ளி ஆசிரியாராலோ அல்லது ஏதோவொரு அரசு அதிகாரிகளால் தான் இலக்கியம் படைக்க முடியும் என்ற விடயத்தை உடைத்து, எழுத்து குறித்த போலி பிம்பத்தை விழுங்கி, சாதாரண வாசகனையும் ஹைக்கூ எட்டியுள்ளது. அவனாலும் கூட எழுத முடியும் என்ற நம்பிக்கையை ஹைக்கூ கொடுத்திருக்கிறது. ஹைக்கூவில் தமது எழுத்தை தொடங்கிய பலர் இன்று வெவ்வேறான இலக்கிய வடிவத்துக்குள்ளும் பிரகாசிக்கத்தொடங்கி விட்டார்கள்.

பக்கம்பக்கமாய் சிறுகதையிலும் கட்டுரையின் வாயிலாகவும் சொல்லப் படவேண்டிய ஒரு கருத்தை மூன்றே வரிகளில் சொல்லி விடலாம் என்பது தான் நம் தமிழ்ஹைக்கூவின் மிகப்பெரிய பலம். அதுவும் கூட அதே கோபத்துடனும் அதே வீரியத்துடனும் சொல்லிவிட முடியும். இப்படியான ஹைக்கூவினால் இவர் ஈர்க்கப்பட்டிருக்கிறார்.

கு.அ.தமிழ்மொழி சிறுமி என்ற போதிலும் அவரது சிந்தனை நம்மை வியக்க வைக்கிறது. பொத்தான் வடிவில் வந்துவிட்ட வீர்ய குண்டுகள் போல இந்த சிறுமிக்குள் இருக்கும் எள்ளலும், சமூகக் கோபங்களும் வாசிப்போரை நிச்சயம் வியப்பில் ஆழ்த்தும். இவரின் தந்தை தமிழ்நேசிப்பாளரும், கவிஞருமான புதுவை.தமிழ்நெஞ்சன் என்பதால் கூடுதல் வாசிப்புக்கான வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது. அதனை சரியாக பயன்படுத்தியும் இருக்கிறார் தமிழ்மொழி.

கள்ளிப்பால்
மறு..
சாதிக்கும் பெண்பால்

என்று சமூகம் நோக்கி நீளும் இவரது ஹைக்கூக்களில் மேலும் சிலவற்றை பார்ப்போம்.

எலி மேல்
பிள்ளையார்
விலங்குவதைத் தடைச்சட்டம்?

எதற்கோவெல்லாம் கொடி பிடிக்கும் ப்ளூ க்ராஸ்காரர்களின் கவனத்துக்கு இக்கவிதையை கொண்டு போக வேண்டும். 🙂

அது போல அடுத்து வரும் ஹைக்கூ சம்மட்டி கொண்டு தாக்குகிறது. உண்மை கொஞ்சம் சுடத்தான் செய்யும். என்ன செய்ய.. நாம் பயணிக்க வேண்டிய தொலைவு வெகுதூரம் என்கிறது இது..,

பெண்ணுரிமை மாநாட்டில்
கனலெனப்பேசினாள்
கணவனின் இசைவோடு

சிறுமி என்ற போதிலும் மூட நம்பிக்கைகள் அற்றவராக இருக்கிறார். பகுத்தறிவுத் தேடல்.., சில சமயங்களில் நகைச்சுவையாக வெடிக்கிறது இப்படி..

ஆறுமுகனே!
பன்னிரு கைகள் வேண்டும்
வீட்டுப் பாடம்.

படிப்பறிவில்லாதவர்
மூன்றில் ஒரு பங்கு
கல்விக் கடவுள்?!

தெருவுக்கு தெரு கோயில்
காப்பாற்றவில்லை
குடந்தைத் தீ

ஏழ்மையோடு இயற்கையை ஒப்பிடும் இந்த ஹைக்கூ எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

எண்ண முடியா பொத்தல்கள்
கருப்புப் போர்வையில்
விண்மீன்கள்

ஈழத்தமிழர் என்ற சொல்லாடல்களை பொதுவில் உரைக்கத் தயங்கும் மனிதர்கள் நடுவில், தம் எண்ணங்களை தயங்காது பதிவு செய்கிறார் இவர்.

நீடிக்கிறது
உரிமைப்போர்
தீவின் தாகம்

இப்படியே நிறைய ஹைக்கூக்களை சொல்லி விட முடியும். சில இடங்களில் வெறும் சொற்களாகவும், முரண்களாகவும் மட்டுமே சில கவிதைகள் தங்கி விடுகின்றன. இனி வரும் காலங்களில் கூடுதல் கவனத்தோடு கவிதை செய்வார் என்று எதிர்பார்ப்போம்.

நூல்: சிறகின் கீழ் வானம்.
ஆசிரியர்: கு.அ.தமிழ்மொழி

வெளியீடு
தமிழ்மொழி பதிப்பகம்
10,இளங்கோ அடிகள் தெரு,
மீனாட்சி பேட்டை
புதுச்சேரி-605 009.
விலை: ரூ.75/-

Advertisements

Entry filed under: வாசிப்பனுபவம்.

நாளை பதிவர்சந்திப்பு: மொக்கை போட வாங்க!! பார்வைகள்

3 பின்னூட்டங்கள் Add your own

 • 1. ♠ யெஸ்.பாலபாரதி ♠  |  9:52 முப இல் ஜூன் 23, 2007

  உலக மகா சோம்பேறியான என்னிடம் இந்த நூல் வந்து ஒன்னறை ஆண்டுகள் ஆகி விட்டன. இப்போது தான் எழுத வாய்த்திருக்கிறது. அதிலும் மேலே எழுதப்பட்டவையில் கொஞ்சம் ஏற்கனவே பிறிதொரு சமயத்தில் எழுதியவை. இங்கேயும் அது பயன்படும் என்று தோன்றியதால்.. மிக்ஸ் பண்ணிவிட்டேன். 🙂

  மறுமொழி
 • 2. செல்வேந்திரன்  |  12:50 பிப இல் ஜூன் 23, 2007

  கவிதைகளை விடுங்கள் அவை எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும். பன்னிரெண்டு வயதில் புத்தகம் வெளியிட வேண்டும் என்ற எண்ணமும், வெளியிட்டதும் பாராட்டப்படவேண்டிய நல்ல விஷயம். நீங்கள் அறிமுகப்படுத்தியதில் என்னை மிகவும் கவர்ந்தது:

  தெருவுக்கு தெரு கோயில்
  காப்பாற்றவில்லை
  குடந்தைத் தீ

  வாழ்த்துக்கள் தமிழ்மொழி!

  மறுமொழி
 • 3. நா ஜெயசங்கர்  |  6:18 முப இல் ஜூன் 26, 2007

  நண்பரே!

  என்னையும் எட்டு போட்டு விளையாட கூப்பிட்டாங்க, சும்மா இருக்க முடியுமா அதனால நானும் பதிவு போட்டுவிட்டேன்! எட்டு பேரை கூப்பிடனுன்னு ரூல்ஸாம் அதனால உங்களை எட்டு போட்டு விளையாட அழைக்கிறேன்… ஓடிவாங்க!!!

  நன்றி,

  நா ஜெயசங்கர்

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


தமிழ்99


அதிகம் பார்வையிடப்பட்டவை

மெய்யாலுமே விடுபட்டவை

இங்கே வந்தவர்களால்..

 • 14,314 வது முறை பார்க்கப்பட்டிருக்கிறது

அண்மைய பதிவுகள்

Feeds


%d bloggers like this: